Thursday, September 10, 2009

ஜெயமோகனுடன் ஒரு நாள் - பகுதி II



இது தான் சாக்கு என்று தஸ்தயேவ்ஸ்கி 'The Brothers Karamazov'ல் Zosimaவை அறிமுகப்படுத்தும் வகையில் பிரம்ம பிரயத்தனம் செய்வதையும் இதை ஒரு இந்திய மனது ‘குரு’ என்ற ஒரு வார்த்தையில் புரிந்து கொண்டிருக்கும் என்றேன். மெலிதாக சிரித்தார். ரஷ்ய புராதன கிறித்துவம் கீழை நாட்டு தரிசனங்களுக்கு மிக அருகாமையிலானது. அதன் வளர்ச்சி பெளத்த சமண தத்துவங்களால் பாதிப்பு அடைந்தது என்றார். யூத மரபியல், கிரேக்க-ரோமானிய மரபியல் இவற்றுக்கு முற்றிலும் வேறான  ஒரு இருப்பை அது கொண்டிருப்பது தல்ஸ்தோய்- தஸ்தயேவ்ஸ்கி வரையில் தொடர்கிறது என்றார்.

தஸ்தயேவ்ஸ்கியின் 'The Brothers Karamazov'ல் சில விமர்சகர்கள் ‘Elder Zosima' பற்றிய பகுதிகள் தேவை இல்லாமல் நீட்டி முழக்கப்பட்டுள்ளன் என்று கூறுவதை வருத்தத்துடன் முறையிட்டேன். இதையே நான் நாவலின் முக்கியமான பகுதியாக கருதுகிறேன் என்றேன். Zosima இளவயதில் இறந்த தனது மூத்த சகோதரனின் ஈடேற்றத்தை அல்யோஷாவிடம் காண்கிறார். அவர் அல்யோஷாவுக்கு போதித்த அடிப்படை அறத்தை வலியுறுத்தும் விதமாக 'Ilyushka'வின் இறுதி சடங்கில் நாவல் முழுமை பெறுகிறது. மேலும் 'Crime and Punishment' நாவலில் ரஸ்கல்நிகொவ் இறுதி மன மாற்றம் அடைவது நம்ப முடியாத அளவுக்கு 'அவசரமாக' சித்தரிக்கபட்டிருப்பதாக வைக்கப்படும் விமர்சனத்துக்கு இவரின் எதிர்வினை என்ன என்று கேட்டேன்.

அவர் மனித ஆழ்மனம் அளவிட முடியாத ஆழமும் ஊகிக்க முடியாத திருப்பங்களுக்கும் தயாராக இருப்பது என்றார்.  ஒரு தருணத்தின் மாற்றம் ஒரு சிறு விதை போல் ஆழ்மனதில் பதிந்து கிடப்பது என்றும் அது அடையும் மாற்றத்தை இயந்திரத்தனமாக 'process'  ஆக சித்தரிப்பது சாத்தியமன்று என்றார். உதாரணமாக விவேகானந்தர் ராமகிருஷ்ணரை சந்தித்ததை விளக்கினார். முதல் முறை பார்த்த உடனேயே 'உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன்' என அரற்றிய ராமகிருஷ்ணரை கண்டு கொஞ்சம் விலகி சென்ற நரேந்திரனின் கணுக்காலை பற்றிய மாத்திரத்தில் விவேகானந்தர் அடைந்த மாற்றத்தின் தருணம் , Oxford - Sorbonne பல்கலைகழகங்களில் படித்த நடராஜ குரு கிராமத்து பூசாரி கணக்காக இருந்த ஸ்ரீ நாராயண குரு 'நடராஜ், இவிடே இருக்கட்டே'  என்று  ஒற்றை வரியில்  மாற்றிய தருணம்,  பின்னர் குரு பூர்ணிமா அன்று ஒரு காவி துண்டு கொடுத்து (அது என்ன நாள் என்று அறிந்திராத ) அவரை சன்யாசி ஆக்கிய தருணம் இவை எல்லாம் தருணம் என்ற மிக சிறிய கால அளவில் ஆழ்மனம் வெகு காலமாக சமைத்து கொண்டு இருக்கும் ஆக்கங்கள் வெளிப்படும் முறை என்றார்.

தல்ஸ்தோய் இதை சித்தரிப்பதில் மிகக் கை தேர்ந்தவர் என்றார். பிரபஞ்ச அளவில் ஒப்பிடும் பொது மனித வாழ்க்கையின் அளவு மிகக் குறைந்தது, அர்த்தமற்றது என உணரும் பொழுது விளையும் இயற்கையான எதிர்வினையான 'existentialism'த்திற்கு முரணாக தல்ஸ்தோய் அறத்தை முன் வைக்கிறார். வாழ்க்கை கடல் அலையின் மேல் கணத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழியாக இருப்பதினாலேயே அறம் மானிட வாழ்வின் இன்றியமையாத தேவை என்றார்.

இவர்களுக்கும் பின் இருந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் Freud உலகை படுத்திய பாடு பற்றி முறையிட்டேன். பிராய்டின் பலவகைக் கட்டுமானங்கள் 'evo devo  theory' மற்றும் 'neuron' இயக்க தியரிகளாலும் முறியடிக்கப்பட்டு வருவதை பற்றிக் கேட்டேன். இவ்விஷயத்தில் VS ராமசந்திரன் சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருவதை பற்றி கேட்டேன்.  என்றாலும் சமீபகாலமாக எல்லா விஷயத்திற்கும் 'neuron' களை சரணாகதி அடைவதை 'Neuro Reductionism' என்ற கருதுகோள் முலம் விமர்சிக்கப்படுகிறது என்றார். Freud க்கு மாற்றாக அவர் வாழ்ந்த காலத்திலேயே CG Jung தனது மாற்று கருத்துக்களை வடிவமைத்ததை பற்றி கூறினார். Freud நடத்திய 'experimental data' விலேயே பிழைகள் இருந்ததை பற்றி கூறினார். Freud அடைந்த பிரபலத்திற்கு காரணம் அவரின் எழுத்துக்களே என்றும், சான்றாக  அவருக்கு ஒரு காலத்தில் நோபெல் பரிசு 'இலக்கியத்துக்கு' பரிந்துரைக்கப்பட்டது என்றும் கூறினார்.

Freud ன் உளப்பகுப்பு ஆய்வியலில் மனித மனத்தின் வளர்ச்சியையும் யூத மரபின் தொன்மையான உருவகத்திற்கும் (There was a Paradise, It was lost) உள்ள ஒற்றுமையை கடற்கரை மணலில் காலால் படம் வரைந்து விளக்கினார். மார்க்ஸ் நினைத்த ஆதி கம்யூனிசம் இந்த உருவகத்தில் இருந்து விளைந்ததே என்றார். இவ்வாறு பேசி கொண்டே Sir Francis Drake தரை தட்டிய Drakes Estuero வரை நடந்து திரும்பி இருந்தோம். ஒரு சில நிமிடங்களே மேகத்திரை விலகி சூரியன் தென்பட்டான். அப்போது கடலில் இருந்த சிற்றலைகளில் தெரிந்த நுரைப்பு கண்ணுக்கு பேருவகை தந்தது. பின் மீண்டும் பனி மூட்டம். நடை. பேச்சு. சில நேரம் நீரின் ஓட்டத்தால் எலும்பு போன்றே ஒரு குட்டித் திமிங்கலம் போன்று தோற்றம் அளித்த சில கோடுகள் அமைந்த  ஒரு பாறையை பார்வையிட்டார்.

இப்படியாக திரும்பி  கார் நிறுத்திய இடத்தை வந்து அடைந்தோம். மற்றும் வேறு ஒரு கார் மட்டுமே தென்பட்டது. அங்கு ஒரு cafe  இருந்தது. இந்த அத்துவான காட்டில் எவ்வாறு வியாபாரம் நடக்கும் என்று கவலைப்பட்டார். அன்று செவ்வாய்கிழமை என்றும் கோடை காலம் என்பதால் சனி ஞாயிறு 'சும்மா கூட்டம் அலை மோதும்' என்று அவரை ஆறுதல் படுத்தினேன். பின்பு வந்த வழியே திரும்பி Mendocino செல்லும் திட்டத்தில் பெருமளவுக்கு கடலை ஒட்டியே செல்லும் CA-1 ரோட்டில் பயணித்தோம்.

பனித்திரை அதற்குள் அவருக்கு சலிப்புடியது போலும். ஊட்டியில் தங்கும் போது மூன்று நாளைக்குப் பிறகு வெய்யில் அடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும் என்று குறிப்பிட்டார். கொஞ்சம் நேரம் ஜேசுதாஸ் பட பாடல்கள் கேட்டார். பின்பு கொஞ்சம் கண்ணயர்ந்தார். Mendocino செல்ல இன்னும் 3:30 மணி நேரம் ஆகும். சுத்த மடையனாக இடை விடாது ஒட்டி தள்ளினேன். இடது புறம் பசிபிக் கடல் வருவதும் போவதுமாக இருந்தது. Tomales Bay என்ற காயல், வைக்கப்போர் நிறத்தில் மேய்ச்சல் வெளிகள், திடீரென்று பனித்திரை கூடிய மரங்கள், பெரும்பாலும் பைன் மரங்கள், பெரிதும் சிறிதுமான  பாலங்கள், பெரிய பாலங்களுக்கு அடியில் பெரும் நதிகள் (Russian River), சிறிய பாலங்களுக்கு அடியில் சிற்றோடைகள் என காட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருந்தது.

தொடரும்.....











 

Jaswant on Jinnah

My Review here

Sunday, September 06, 2009

ஜெயமோகனுடன் ஒரு நாள் - பகுதி - 1

சில விளக்கங்கள் : இது தமிழில் எழுதும் என் முதல் முயற்சி. அடைமழை என பொழிந்த கோர்வையான, விரிவான ஜெயமோகனின் வரிகளில் 3 வாரங்களுக்குப்பின் நினைவில் தங்கியதை மீட்டு பின் சொல்லாக்குவதில் உள்ள என் சிக்கலுக்கு உங்கள் புரிதலை வேண்டுகிறேன்.

------

ராஜன் இல்லத்தில் வெகுநேரம் பேசிகொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். எனது IPhoneஐ –Vanல் உள்ள cassette player adapter உடன் கோர்த்து விட்டேன். இது எப்படி சாத்தியம் என்ற அவரது வினாவுக்கு தெளிவாக பதிலிறுக்க முடியாமல் பொத்தாம்பொதுவாக சமாளித்தேன். ‘விழியே கதை எழுது’ என்ற பாடலை கேட்டுக்கொண்டெ ஒரு மிகச்சிறிய அறிமுகத்தை முன்வைத்தேன். நான் அவரது நூல்களில் இது வரை படித்தவை பற்றிச் சொன்ன போது ‘நினைவின் நதியில்’ பற்றிய என் கருத்து என்ன என்று வினவினார். மிகச்சிறப்பாக உரையாடலின் மூலம் சு.ரா.வின் ஆளுமை கண்ணெதிரெ நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினேன். உண்மையில் அது ‘நினைவின் நதி’ யன்று. சு.ரா.வின் மரணத்தில் விசை கொண்டு எழுந்த காட்டாற்று வெள்ளம். மிகச்சில நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்ட நூலெனினும் காலத்தின் அளவு நதி போன்ற போக்கில் எழுதபட்டுள்ளது. சு.ரா.வுடன் எழுத்தாளர் கொண்டிருந்த வேறுபாடுகள் கறாராகவும் கண்ணியமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை எல்லாம் சொல்ல முடியவில்லை.


அமெரிக்க சிறுகதைகள், முக்கியமாக ‘New Yorker' வகையறா பற்றித் துழாவினேன். நான் வெகுகாலமாக படித்துவருவன என்றாலும் அவற்றுக்கான இலக்கணத்தை John Updike நிறுவியதை தெளிவாக விளக்கினார். புறவயமான கூறுதலை முன்னிறுத்துதல், செயல்பாடு, சம்பவம், நேரடி அனுபவம், மிதமான உணர்ச்சி, ஆகியவையே இவற்றின் விழுமியங்கள். O Henry பாணியிலான இறுதி முடிச்சு முத்தாய்ப்பாக. உலகின் எல்லா பகுதிகளில் இருந்து எழுதப்பட்டு மொழிபெயர்க்கப் பட்டாலும் இந்த இலக்கணத்தை அவர்கள் விடுவதில்லை என்றார். அதனால் ‘மிகச்சிறந்த சிறுகதை’ தொகுப்புகளில் 'New Yorker' வகையறா இடம் பெறுவது அரிதாக உள்ளது என்றார். இவற்றிடையே ஒரு தமிழ் சிறுகதை ஒன்றையும் (ஒரு நிலச்சுவான்தார் தன் ‘துணைவி’யார் வீட்டுக்கு செல்வதா வேண்டாமா என ஊஞ்சலில் ஆடிக்கொண்டே யோசித்து பின் போகாமலே முடிந்து விடும் கதை) மற்றும் திகில் உணர்ச்சி மேலுந்த எழுதப்பட்ட ஒரு கதையையும் (உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஒரு மான் இரு நண்பர்களை மீண்டு வந்து திகிலூட்டும் கதை) இவற்றின் வேறுபாடுகளை விவரித்தார்.இவ்வாறாக 'Richmond-San Rafael Bridge' வந்து சேர்ந்தது. தமிழ்க்கதைகள் மொழிபெயர்ப்பிற்கு பிறகு ஒரு பொதுத்தன்மையை அடையும் பொருட்டு தனது கலாசார களத்தை இழந்து விடுவன என்றும் குறிப்பாக அவரது ’மாடன் மோட்சம்’ ஒரு வாசகருக்கு புரிய வேண்டுமென்றால் 80 களில் குமரி மாவட்ட்த்தில் மண்டைக்காடு சம்பவங்களின் பின்னணியும் இந்தியா முழுவதும் உயர்மத தத்துவத்திற்கும், நாட்டார் மத நடைமுறைக்கும் தொடர்ந்து வரும் முரணியக்கம் ( மோதல் என்று கூறி பின் உடனே ஜகா வாங்கினேன்) இவை புரியாவிட்டால் கதை புரியாது என்று தயாரித்து வைத்த மேதாவித்தனத்தை களமிறக்கினேன். அமைதியாக ஆமோதிப்பது போல் இருந்தது. இதற்குள் வீடு வந்து சேர்ந்தது. அடுத்த நாள் அதிகாலை எழ வேண்டி இருந்ததால் மேற்கொண்டு கதைக்க வில்லை.

5:40 வாக்கில் அவரை எழுப்பினேன். தேநீர் போடட்டுமா என்ற கேள்விக்கு மிகவும் நீர்க்க இருக்க வேண்டும் என்று உத்தரவே போட்டார். சரிதான் என்று என்று தண்ணீரை கொதிக்க விட்டேன். அவரிடம் பலவகை தேநீர்ப்பை அடங்கிய குடுவையை நீட்டி தேர்ந்து எடுக்குமாறு கூறினேன். அவர் எடுத்த தேநீர்ப்பையை சுடுநீரில் முக்கியவுடன் பின்னாலேயே வந்து தூண்டில் மீனைத் தூக்குவது போல் தூக்கினார். தேநீர்ப்பை கலங்கி குடுவையின் அடி மறைக்கும் முன் எடுத்து விடுவதே நல்லது என்றார். பின் குளித்து முடித்து Bank Audit செய்யும் அதிகாரி போல சிற்றுண்டி உண்ணத்தயாரானார். இயற்கை உணவு பற்றி இராமகிருஷ்ணன் எழுதிய நூலை மொழிபெயர்த்த பேச்செடுத்தேன். மனித உடல் பிரமிக்கத்தக்க அளவு மிகக்குறைந்த அளவு உணவில் உயிர்வாழ படைக்கப்பட்டுள்ளது என்றார். ஒரு குரங்கை நாம் சாப்பிடும் அளவு சாப்பிட பழக்கினால் அது அஜீரணத்தால் இறந்துவிடும் என்றார். மேலும் சமைக்காத உணவு மனித உடலுக்கு மிகவும் உகந்தது என்றும் ஒரு இட்லி விள்ளலை வாயில் போட்டுக்கொண்டே ஒரு Post-Mortem பார்த்த அனுபவத்தில் மனித ஈரலின் உள்ள அசாதாரண ஜீரண சக்தி உள்ள அமிலங்களைப் பற்றி விவரித்தார்.

பின் Pt.Reyes- Mendocino செல்லும் திட்டத்தில் கிளம்பினோம். அவருக்கும் எனக்கும் உள்ள பொது நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். யார்தான் அவர்கள் என்று மண்டை வெடிக்கட்டுமே என்ற அவாவில் மேற்கொண்டு இவ்விஷயம் ப்ரஸ்தாபிக்கப்பட போவதில்லை. ஈழத்தின் கடைசி நிகழ்வுகளை ஓட்டி ஆதீனகர்த்தர்களின் கூட்டத்தில் தருமபுர ஆதீனம் அவர்களின் மிகச்சிறந்த உரையை பாராட்டினார். சைவ மதத்தின் குருவாக மட்டும் அல்லாமல் சைவர்களை போருக்கு ஆசீர்வாதம் வழங்கி அனுப்பவதற்கு மாறாக எல்லா மதத்தினருக்கு இடையேயும் இணக்கத்திற்கும் அமைதிக்கும் மாறாத அறத்திற்கும் பாடுபடுவதே ஆதீனகர்த்தர்க்கு உரியது என்று தருமபுர ஆதீனம் பேசியதாக குறிப்பிட்டார்.

Pt.Reyes தீபகற்பமானது ஒரு வினோதமான நிலப்பரப்பு. கடும் கோடையில் நல்ல பனித்திரையுடன் காணப்படும். 50 அடி முன்னால் தெரியாது. கடலில் இருந்து 25 மைல் உள்ளே வருவதற்குள் 3 விதமான தாவரவியல் தன்மை உடையது. கடலை ஒட்டி வறண்ட மண், பின் தட்டையான தாவரங்கள் உள்ள சமவெளி, பின் அடர்ந்த நெடுமரங்கள் அடங்கிய Inverness மலையிடுக்கு. அன்று கடுமையான பனித்திரை. மாடுகள் படுத்து இருந்தாலும் கண்ணுக்கு எளிதில் புலப்படவில்லை. Sir Francis Drakeன் கப்பல் தரை தட்டிய கடற்கரை வந்து அடைந்தோம் வீராவேசமாக Jacket இல்லாமல் இறங்கி அவரைப்ப் போல் பின் Jacket அணிந்து கொண்டேன். அலைகள் சுத்தமாகவே இல்லை. Low Tide நேரம். சூரியன் பேருக்கு நிலா மாதிரி இருந்தது.

மெல்ல நடக்க ஆரம்பித்தோம். எங்கும் ஒரே பனித்திரை. சாம்பல் நிறத்தின் சாம்ராஜ்யம். எனக்குத் தெரிந்த ஒரு புகைப்படநிபுணர் Pt.Reyes பகுதியை வெகுவாக படம் எடுத்து வருபவர் ஒருவரை சந்தித்த அனுபவத்தைப் பற்றிக் கூறினேன். அவர் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே எடுப்பவர். அவரிடம் நான் கேட்டது இதுதான். ’So, you shoot only black and white?' அவரிடம் இருந்து ஒரு ஏவுகணை பதிலாக வந்தது. ‘and the milliion shades of gray'.
அதை இவரிடம் சிலாகித்தேன். சற்றே மலர்ந்து தனது குரு நித்ய சைதன்ய யதி கரிக்கட்டி ஓவியத்தில் தேர்ந்தவர் என்றார்.

குரு யாருக்குத் தேவை என்ற எனது பொத்தாம்பொதுவான கேள்விக்கு பதில்கூறத்தொடங்கினார். ‘தண்ணீரின் தேவை தாகமிருப்பவனுக்கு’ என்று கூறி நிறுத்தினார். சும்பத்தனமான கேள்விக்கு இது போதும் என்று நினைத்துவிட்டாரோ என விசனப்படும் முன்பேயே விரிவாக பதிலளிக்கத்தொடங்கினார். கல்வி என்பது சமைத்து முடித்த பண்டமான ‘சிந்தனை’யை ஜீரணம் செய்யும் முறையாக உள்ளது என்றார். சிந்திக்கும் முறை குருவை அருகில் இருந்து அவதானிப்பதால் சாத்தியமாகிறது என்றார். ’சித்தம்’ ஒரு நிலையான பொருளன்று. அதன் இயக்கம், வளர்ச்சியே (’சித்த வ்ருத்தி’) அதன் உள்ளார்ந்த இயல்பு. வளர்ச்சியும் இயக்கமும் உறைந்த முடிவிறுத்த விஷயங்களான ‘சிந்தனை’யை கற்றுத்தேர்வது மூலம் சாத்தியமன்று, மாறாக சித்தம் தனது விருத்தி மூலம் வந்தடைந்த விதம் மிக முக்கியம். இது ஒரு குருவின் அருகாமையில் இருந்து கற்றுக்கொள்வது. இவ்வகையில் தனது குரு நித்ய சைதன்ய யதி பல்வேறு தளங்களில் பரவலாக உள்ள சிந்தனைகளில் சஞ்சாரம் செய்து அவர் கூடவே வரும் சீடர்களுக்கு இம்முறையைக் கற்பித்ததை விளக்கினார்.

தொடரும்.....